news

Tuesday, May 22, 2012

வைகோவுடன், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சந்திப்பு !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக, தமிழரசுக் கட்சியின் சார்பில் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வரும், சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களும், தமிழரசுக் கட்சியின் நிர்வாகிகளும், ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ அவர்களை, இன்று (22.5.2012) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு, தாயகத்தில் சந்தித்தனர். யுத்த காலத்தில் ஏற்பட்ட ஈழத்தமிழர் படுகொலை குறித்தும், கடந்த மூன்று ஆண்டுகளாக, அங்கு ஏற்பட்டு உள்ள சூழ்நிலை, சிங்களர் குடியேற்றம், ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பு அற்ற அபாயம், சர்வதேச சமுதாயம் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமைகள் குறித்தும், மிக விரிவான கருத்துப் பரிமாற்றங்கள் நடைபெற்றன என அதிர்வு இணையம் அறிகிறது.

�தாய்த்தமிழகம்தான் ஈழத்தமிழர்களைப் பாதுகாத்துத் துன்பத்தில் இருந்து விடுவிக்க முடியும் என்றும், ஈழத்தின் விடியல் தமிழ்நாட்டின் கைகளில்தான் இருக்கின்றது� என்றும், ஸ்ரீதரன் நம்பிக்கையோடு கூறினார்.

வைகோ கூறியதாவது:

சுதந்திரத் தமிழ் ஈழ தேசம்தான் நமது இலக்கு. ஆனால், சிங்கள இனவாத அரசு, ஆறாவது சட்டத் திருத்தத்தைக் கொடுவாளாகப் பயன்படுத்தி, இலங்கைத் தீவில் சுதந்திர ஈழக் குரல் எழுப்பும் அரசியல் கட்சிகளை நசுக்கவும், நாசமாக்கவும் திட்டமிட்டு உள்ளதால், தீவில் உள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள் வெளிப்படையாகத் தனி ஈழக் குரல் கொடுக்க முடியாத தற்போதைய நிலையை, நன்கு அறிவோம்.

ஈழத்தமிழர்கள் பிரிவினை கேட்கவில்லை. இழந்த சுதந்திரத்தையே மீண்டும் கேட்கின்றனர். இறையாண்மை உள்ள சுதந்திர தேசமாக அரசோச்சி வாழ்ந்த தங்கள் தாயகம், சிங்களவரின் ஆதிக்கத்தில் அடிமைப்பட்டுக் கிடப்பதால், அந்த விலங்குகளை உடைத்து, அந்நியர் ஆக்கிரமிப்பை அகற்றி, இழந்த சுதந்திரத்தை மீண்டும் அடைவதற்கான, ஈழத்தமிழரின் நியாயமான விடுதலைப் போராட்டத்தை, அனைத்து உலக நாடுகள் நிராகரிக்கவோ, உதாசீனம் செய்யவோ முடியாது. தமிழர் தாயகத்தில் இருந்து சிங்களரை வெளியேற்றவும், சுதந்திர ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பை ஐ.நா.மன்றம் நடத்தவும், அதில் அனைத்து உலக நாடுகளில் ஆங்காங்கு வாழும் புலம் பெயர்ந்த ஈழத்தமிழர்கள் வாக்கு அளிக்கும் ஏற்பாடுகள் செய்யப்படவுமான கோரிக்கையை, அனைத்து உலக மக்கள் நீதியும் நியாயமுமாகக் கருதி ஏற்கவே செய்வார்கள்.

அதுவே ஈழத்தமிழர்களின் இலக்கு; தாய்த் தமிழகத்தின் இலக்கு; தரணி வாழ் தமிழர்களின் இலக்கு. அந்த இலக்கினை உறுதியாக அடைவோம். சுதந்திரத் தமிழ் ஈழம் மலர்ந்திடச் செய்வோம்� என்று வைகோ கூறினார்.

No comments:

Post a Comment