news

Sunday, May 20, 2012

தமிழர்களின் மொத்த நிலப்பரப்பையும் தனதாக்கி கொள்ள துடிக்கிறான் சிங்களவன்! சீமான் பேச்சு!


இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள். அங்கு சிங்களவர், தமிழர்கள் என்று இரண்டு இனம் வாழ்கிறது. ஆனால் தமிழ் இனத்தை சார்ந்த யாரும் பிரதமர், ஜனாதிபதி ஆக முடியாது. ஆகவே அது சிங்கள பௌத்த மத தீவிரவாத நாடு. இவ்வாறு இயக்குனர் சீமான் தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சியின் 3 ம் ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய போது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்த பேசியதாவது:
அரசியல் புரட்சிதான் நாம் தமிழர் கட்சி. இன வரலாற்றில் மே 17, 18  வது தேதிகள் மறந்து போகும் நாட்கள் அல்ல. இந்த இரண்டு நாட்களில் தான் ஈழத்தில் நமது 50 ஆயிரம் உறவுகள் கொன்று ஒழிக்கப்பட்டனர்.
இலங்கையில் போர் குற்றம் நடந்து உள்ளது என்கிறார்கள். நாம் சொல்கிறோம். அந்த போரே குற்றம் என்று. உயிரை பறிப்பது உரிமை மீறல் அல்ல. அதற்கு பெயர் கொலை.
பச்சிளம் குழந்தைகள் மீது குண்டு வீசி கொன்றார்கள். கர்ப்பிணி பெண்கள், முதியோர் மீது குண்டு வீசி கொன்றார்கள். பள்ளிக்கூடம், மருத்துவமனைகள் குண்டு வீசி அழிக்கப்பட்டன. இதனால் தான் அது படுகொலை. திட்டமிட்ட இன படுகொலை.
இலங்கையில் அரை நூற்றாண்டுக்கு மேலாக வாழும் பூர்வ குடிமக்கள் தமிழர்கள். ஆனால் மொத்த நிலப்பரப்பையும் தனதாக்கி கொள்ள துடிக்கிறான் சிங்களவன்.
இலங்கை ஒரு ஜனநாயக நாடு என்கிறார்கள். அங்கு சிங்களம், தமிழர்கள் என்று இரண்டு இனம் வாழ்கிறது. ஆனால் தமிழ் இனத்தை சார்ந்த யாரும் பிரதமர், ஜனாதிபதி ஆக முடியாது. ஆகவே அது சிங்கள பௌத்த மத தீவிரவாத நாடு.
இந்திய இராணுவத்தில் தமிழர்கள் இடம்பெற முடியும். ஆனால் அந்த நாட்டு இராணுவத்தில் தமிழர் ஒருவரும் இடம்பெற முடியாது. அது எப்படி இலங்கை ஜனநாயக நாடாக இருக்க முடியும்?.
சிங்கள மாணவர்கள் 35 சதவிதம் வாங்கினால் வெற்றி. ஆனால் தமிழ் மாணவர்கள் 80 சதவீதம் வாங்கினால் தான் வெற்றி என்று அறிவித்தனர். அதிலும் தமிழ் மாணவர்கள் தான் வெற்றி பெற்றனர்.
விடுதலைப்புலிகள் என்பது இனமக்களை காக்க பிரபாகரன் உருவாக்கிய தமிழ் ஈழ தேசிய இராணுவம். தற்போது தாய் ஈழத்தை தரிசாக்கி விட்டு முல்லைத்தீவில் 10 ஆயிரம் சிங்களவர்கள் குடியேறி விட்டனர்.
வழிபாட்டு தலங்கள் இடிக்கப்பட்டு விட்டது. திட்டமிட்டு கலப்பினத்தை உருவாக்கி வருகின்றனர். முள்வேலிக்குள் தமிழ் மக்கள் தவிக்கும் நிலை உள்ளது. ஆடு, மாடுகளைப் போல் அடைக்கப்பட்டு கிடக்கிறார்கள்.
ஆனால் இங்கே இருந்து சென்ற பாராளுமன்ற குழுக்கள் அந்த மக்கள் ஈழத்தை விரும்பவில்லை என்று கூறுகிறார்கள்.
இலங்கை ஒரே நாடா? தனித்தமிழ் ஈழமா? என்று முடிவு எடுக்கும் உரிமை அங்குள்ள தமிழ் மக்களை தவிர யாருக்கும் இல்லை.
இன்று விடுதலை கேட்டு போராடுகிறோம் என்று நினைக்கிறார்கள். காலம் மாறும். எங்களிடத்தில் சிங்களர் மண்டியிட்டு விடுதலை கேட்கும் காலம் வரும்.
காங்கிரஸ், பா.ஜனதா, மார்க்சிஸ்ட் கட்சிகள் இணைந்து இலங்கையில் ஒரு வாக்கெடுப்பு நடத்த வேண்டும். ஒருங்கிணைந்த ஒற்றை ஆட்சிக்குள் வாழ்கிறீர்களா? அல்லது தனித்தமிழ் ஈழ ஆட்சியில் மீள்கிறீர்களா? என்பது தான் அந்த வாக்கெடுப்பு.
ஒரே இலங்கைக்குள் ஒன்றுபட்டு வாழ்கிறோம் என்று அவர்கள் வாக்களித்தால், நாங்கள் வாய் மூடி மௌனிக்கிறோம். எங்களுக்கான ஒரே தீர்வு தனித் தமிழீழ சோஷலிச குடியரசு என்று அவர்கள் வாக்களித்தால் அதை பிரகடனப்படுத்த நீங்கள் தயாரா?
வருகிற 2015 ம் ஆண்டு மே 18 ந்தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் திருச்சி மாநகரில் தமிழர் தேசிய இனத்தின் எழுச்சி மாநாடு, சர்வ தேசிய மாநாடு நடத்தப்படும் இதில் உலகம் முழுவதும் இருந்து 7 லட்சம் தமிழர்கள் திரள்வார்கள்.
அந்த மாநாட்டில், 2016 ல் உருவாக்கும் புதிய அரசியல் வரலாறு பற்றி பிரகடனப்படுத்துவோம். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டி போடும் வேட்பாளர்கள், தொகுதிகள் பற்றி அறிவிக்கப்படும்.
இவ்வாறு சீமான் பேசினார்.

No comments:

Post a Comment