news

Sunday, May 20, 2012

கலைஞரின் தமிழீழக் கோரிக்கை! யுனெஸ்கோ பொதுச்செயலாளருக்கு அசன் முகம்மது ஜின்னா கடிதம்


யுனெஸ்கோ மையத்தின் ஆசிய பசிபிக் மனித உரிமைகள் மற்றும் தகவல் தொழில் நுட்ப ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள அசன் முகம்மது ஜின்னா யுனெஸ்கோ மையத்தின் பொதுச்செயலாளர் டாக்டர். டே சுல் கிம் அவர்களுக்கு தனித்தமிழ் ஈழம் அமைய ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்த ஆவன செய்ய வேண்டும் என கடிதம் எழுதியுள்ளார்.
அசன் முகம்மது ஜின்னா எழுதியுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
யுனெஸ்கோ மையத்தின் ஆலோசகராகப் பொறுப்பேற்றுள்ள நான், எனது முதல் பணியாகப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்கள் பற்றிய தகவல்களைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விழைகிறேன்.
உலகெங்கும் வாழும் தமிழர்கள், இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட அத்துமீறல்கள் மற்றும் கொடிய தாக்குதல்களால் மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர்.
தாய்த் தமிழகம் என உலகத் தமிழர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் எங்கள் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள மக்கள், இத்தகையக் கொடூரத் தாக்குதல்களிலிருந்து இலங்கைத் தமிழர்கள் எப்போது விடுதலையாவார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏக்கமும் கொண்டுள்ளனர்.
தமிழகத்தின் மிகப் பெரும் அரசியல் தலைவரும், இந்தியாவின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரும், 89 வயதிலும் தமிழினத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருப்பவரும், ஐந்து முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவருமான கலைஞர் கருணாநிதி, தன் நெடிய பொதுவாழ்வு அனுபவத்தின் வாயிலாக, இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வும் அமைதியும் கிடைத்திட வேண்டும் என்பதைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும், அமைதியுடன் வாழ வழிவகை செய்ய வேண்டும் என 1956ல் நடந்த கட்சியின் பொதுக்குழுவில் அப்பொழுதே தீர்மானம் நிறைவேற்றினார் கலைஞர்.
இலங்கைத் தமிழர்களுக்குத் தனித் தமிழீழத் தாயகம் உருவாவதே உண்மையான விடுதலை என்பதையும் இதற்கான பொதுவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என்றும் கலைஞர் அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னெடுப்பில், பொதுவாக்கெடுப்பு ஒன்றினை நடத்தித் தனித் தமிழீழம் அமைத்துத் தரவேண்டும் என்ற கோரிக்கை மனித உரிமைகளிலும் மனித சமுதாயத்தின் நல்லிணக்கத்திலும் நம்பிக்கை உள்ள அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாகும்.
இந்த வாக்கெடுப்பில், இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் உலகின் பல நாடுகளிலும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமே நடத்தப்படவேண்டும் என்பது தமிழகத் தலைவர் கலைஞரின் கோரிக்கையாகும்.
இலங்கையில் தமிழர்கள் பகுதியில் அந்நாட்டு அரசாங்கத்தின் ஆதரவுடனும் வலுக்கட்டாயத்தின் பேரிலும் குடியமர்த்தப்பட்டு வரும் சிங்கள மக்களை இப்பொது வாக்கெடுப்பில் பங்கெடுக்க அனுமதிப்பது, பொதுவாக்கெடுப்பின் நோக்கத்திற்குச் சிதைவினை ஏற்படுத்தும் என்பதையும் கலைஞர் அவர்களும் அவரது தலைமையிலான தமிழ் ஈழ ஆதரவாளர்கள் அமைப்பும் (‘டெசோ’) வலியுறுத்தியுள்ளது.
இந்த பொது வாக்கெடுப்பு எனும் கருத்துக்கு உலகெங்கும் உள்ள தமிழர்களிடம் மட்டுமின்றி, மேற்குலக நாடுகளின் மனித நேயச் செயல்பாட்டாளர்களிடமும் ஆதரவு பெருகி வருகிறது.
டெசோ அமைப்பினை உருவாக்கி அதன் மூலம் இலங்கைத் தமிழர் வாழ்வுரிமைக்கான இந்திய அரசின் ஆதரவைப் பெறுவதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் மூலமாகப் பொது வாக்கெடுப்பு நடத்தி கொசோவோ, தெற்கு சூடான், கிழக்கு தைமூர் மற்றும் மான்ட்டிநீக்ரோ நாடுகளைப் போலத் தமிழ் ஈழம் என்ற தனி நாட்டை அமைத்துத் தரவேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றியதிலும் தமிழகத் தலைவர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் பங்கு அளப்பரியது. மேலும் டெஸோ அமைப்பின் சார்பில் மக்களைத் திரட்டி மாநாடு நடத்திடவும் திட்டமிட்டுள்ளார்.
2009ல் இலங்கை இராணுவம் தன் சொந்த நாட்டு மக்கள் மீதே தொடுத்த கொடூரப் போரின் கொடிய விளைவுகளுக்குப் பின், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அவர்கள் இலங்கைக்குச் சென்றதன் விளைவாக, இந்தோனேசியாவைச் சேர்ந்த மார்சுக் தருஸ்மன் தலைமையில் இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை செய்ய ஒரு குழு அமைக்கப்பட்டது.
12 ஏப்ரல் 2010 அன்று அளிக்கப்பட்ட இக்குழுவின் விசாரணை அறிக்கை, மே 2009ல் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்தும் அப்பாவி மக்களை உலக நாடுகள் காப்பாற்ற முயலவில்லை என்பதையும் தெளிவாகவும் விரிவாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.
இந்நிலையில், போர் முடிவுற்ற பிறகும் தமிழர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் அத்துமீறல்கள் குறித்தும் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
தமிழர்கள் வாழும் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியமர்த்தப்படுவதும், தமிழர்கள் வாழும் பகுதிகளிலுள்ள அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் தகர்க்கப்படுவதும், தமிழர்களின் பாரம்பரியச் சின்னங்கள் அழிக்கப்படுவதும் தொடர்ந்து நடைபெறுகிறது.
தமிழர்கள் வாழும் ஊர்களின் பெயர்கள் கூட மாற்றப்பட்டு ஒரு கலாச்சாரப் படையெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இது தமிழர்கள் வாழும் பகுதிகளில் அவர்களின் உரிமைகளைப் பறிக்கத் திட்டமிட்டுச் செய்யப்படும் சதியாகும். இதை இலங்கையில் போர் என்ற பெயரில் நடைபெற்ற இன அழிப்பின் தொடர்ச்சியாகவே கருத வேண்டும்.
இலங்கையில் மிச்சமுள்ள தமிழர்கள் வாழும் பெரும்பாலான பகுதிகளில் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பற்றும் உள்ளனர்.
வாழ்வாதாரமும் அடிப்படை மனித உரிமையும் நிராகரிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்குக் கல்வி, அறிவியல் மற்றும் சமூக மேம்பாடு ஆகியன எட்டாக் கனியாக இருப்பதால் எந்த வகையில் பார்த்தாலும் அவர்கள் தங்கள் அடையாளங்களை முற்றிலுமாக இழந்தவர்களாகி, பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே தாங்கள் உறுதியான நடவடிக்கைகளை எடுத்து, உரிய முறையில் ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்தி இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்களைத் தடுக்கவும், அங்கு அமைதி நிலவவும் உள்ள ஒரே வழியான ஐக்கிய நாடுகள் சபை வாயிலான பொது வாக்கெடுப்பு என்கிற உலகத் தமிழர்களின் பெருவிருப்பத்துடனான, கலைஞர் அவர்களின் கோரிக்கையினை விரைந்து செயல்படுத்திட தாங்கள் ஆவன செய்யுமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இது தொடர்பான உரிய ஆவணங்கள் மற்றும் தகவல்கள் திரட்டப்பட்டு வருகின்றன. அவற்றைத் தங்களின் மேலான பார்வைக்கு விரைவில் அளிக்கிறேன்.  என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment