news

Saturday, May 12, 2012

முஸ்லிம்களை மீள்குடியேற்றாவிடில் புலிகளின் அநியாயங்களை விசாரிக்க ஆணைக்குழு நியமிக்க கோருவேன் : அமைச்சர் ரிசாத்


தம்புள்ள பிக்கு மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்டது போல் மன்னார் ஆயரும் நடந்துகொள்வதாகக் அமைச்சர் ரிசாத் பதியுதீன் குற்றம் சாட்டியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தம்புள்ளயில் ஒரு பிக்கு, மனிதன் செய்ய முடியாத வகையிலான மிகவும் கேவலமான வேலைகளை செய்தார். அவர் நேரில் சென்று பள்ளிவாசலை உடைத்தார். மிரட்டல்களை விடுத்தார்.
அதேபோன்று இப்போது மன்னார் ஆயரும் முஸ்லிம்களுக்கு காணிகளை விற்க வேண்டாமென பிரசாரம் செய்து வருகின்றார். முஸ்லிம்களுக்க யாரும் காணிகளை விற்றால் அவர்களை அடிப்பேன் என்றும் ஆயர் கூறி வருகின்றார்.
அத்துடன் மன்னாரில் காடுகளை முஸ்லிம்கள் ஆக்கிரமிப்பதாக ஜனாதிபதிக்கு கடிதமும் அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் பிரதியை ஜனாதிபதி என்னிடம் தந்துள்ளார்.
நான் யாருடைய காணியையும் ஆக்கிரமிக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை. இடம்பெயர்ந்த ஒரு இலட்சம் முஸ்லிம்களையும் மீள்குடியேற்றவே முயற்சிக்கின்றேன். என் உயிரைக் கொடுத்தாவது அவர்களை அந்த இடங்களில் மீள்குடியேற்றியே தீருவேன்.
முஸ்லிம்களை மீள்குடியேற்றும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முன்னின்று செயற்பட வேண்டும். ஆனால், அவர்கள் இப்படி நடந்து கொள்ளவில்லை. புலிகளால் விரட்டப்பட்ட ஒரு இலட்சம் மக்கள் இன்று புத்தளத்தில் தங்கியுள்ளனர்.
இவர்களை மீள்குடியேற்ற அனுமதிக்காது விட்டால், 20 இலட்சம் முஸ்லிம்களையும் ஒன்று திரட்டி புலிகளின் அநியாயங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ஒரு ஆணைக்குழுவை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோருவேன்.
தமிழர்களின் போராட்டத்தை நான் எதிர்க்கவில்லை. அவர்களுக்குரிய தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அதேபோல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்கும் தீர்வுகள் வேண்டும். தமிழரின் பிரச்சினை தொடர்பில் பேசும் அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் முஸ்லிம்கள் தொடர்பில் பேசத் தயாராயில்லை. இது பெரும் அநீதியானது’ என அமைச்சர் ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment