news

Saturday, May 19, 2012

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழரசுக்கட்சி போட்டியிடுவது துரோகம்! பிள்ளையான்


தமிழரசுக்கட்சி கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிடுமானால் அது கிழக்கு மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாக கருதப்படும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தாம் இதுவரையில் கிழக்கு மாகாண சபையினை கலைப்பதற்கான அனுமதியை வழங்கவில்லையெனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு இராமகிருஸ்ண மிஷன் மகளிர் மகா வித்தியாலயத்தின் 75 ஆவது ஆண்டு பவளவிழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
இன்று தேர்தல்கள் தொடர்பில் பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. முக்கியமாக முதலமைச்சர் தொடர்பிலேயே அதிகமாக பேசப்படுகின்றது. இது தொடர்பில் மட்டக்களப்பு மண்ணிலே ஒரு பூரண தெளிவு வரவேண்டும்.
தற்போதுள்ள நிலையில் தமிழர்கள் எவ்வாறு இந்த தேர்தலை எதிர் கொள்ளப்போகின்றார்கள் என்று அஞ்சுகின்ற, விமர்சிக்கின்ற நிலையுள்ளது.
தமிழ் மக்களின் பிரச்சினையில் முடிவெடுக்கவேண்டியவர்கள் தமிழரசுக்கட்சியினர், தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்காரர்கள். இவர்கள் பல வரலாற்று துரோகங்களை செய்திருக்கின்றார்கள்.
தமிழ் மக்களுக்கு சிங்கள அரசியல் தலைவர்களை விட தமிழ் அரசியல் தலைவர்களே பெரும் துரோகங்களை செய்திருக்கின்றார்கள் என்று நான் சொல்வேன்.
உண்மைகள் என்றும் மரணிப்பதில்லை. பொய் குதூகலிக்கும் ஆனால் மரணித்துவிடும். துரோகிகள் வசையில் தமிழர்களில் முதன் முதலாக துரோகி பட்டம் சூட்டப்பட்டவர் சொல்லின் செல்வர் இராஜதுரை. இவரை துரோகி என்று கூறியபோது மட்டக்களப்பு மக்கள் ஒருபோதும் அவரை துரோகி என்று கூறவில்லை.ஆனால் மீண்டும் அவரை மட்டக்களப்பு மக்கள் தெரிவுசெய்தனர்.
தமிழரசுக்கட்சி தலைமைப்பொறுப்பு அவருக்கு வழங்கப்படாமல் தோற்றுப்போயிருந்த அமிர்தலிங்கத்துக்கு அது வழங்கப்பட்டது.
எமது சமூகம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தமிழரசுக்கட்சியை ஆதரித்து வந்துள்ளது. அவர்கள் இத்தனை காலத்தில் எதனை சாதித்துள்ளனர் என்பதை அனைவரும் சிந்திக்கவேண்டும்.
இந்த கிழக்கு மாகாண சபை தேர்தலில் தமிழரசுக்கட்சி போட்டியிட்டால் அது தமிழருக்கு செய்யும் வரலாற்று துரோகமாகவே பார்க்கப்படும்.கடந்த கால வரலாற்றில் செய்த துரோகத்தை காட்டிலும் கிழக்கு மாகாண மக்களுக்கு செய்யும் பெரும் துரோகமாகவே இது கருதப்படும்.
இதன் மூலம் தமிழர்களை எதிர்க்கட்சியில் கொண்டுபோய் அமரச்செய்யும்.
சிங்களவரும் முஸ்லிம்களும் ஒன்றாக ஆட்சிசெய்யும்போது தமிழர்களின் பொருளாதாரம்,கல்வி நிலை பாரிய பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய பாதகமான நிலை கிழக்கு மாகாணத்துக்கு வரலாம்.
இது தமிழரசுக்கட்சி தலைவர்களுக்கு தெரியாமல் இல்லை. தெரிந்தும் அவர்கள் செய்வதற்குரிய வாய்ப்பு இருக்கின்றது. மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் தலைமைத்துவத்தை எடுப்பதை விரும்பாத ஒரு சிலர் அங்குள்ளதை நாங்கள் அறிவோம்.

No comments:

Post a Comment