news

Tuesday, May 15, 2012

“கோத்தாவின் போர்” வெளியிட முன்னரே கிளம்பிய சர்ச்சை


விடுதலைப் புலிகள் தோற்கடிப்பதில் பெரும் பங்கு வகித்த பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்குப் புகழாரம் சூட்டும் வகையில், நேற்று வெளியிடப்பட்ட 'கோத்தாவின் போர்: இலங்கையில் தமிழ்ப் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுதல்' (‘Gota’s War: The Crushing of Tamil Tiger Terrorism in Sri Lanka) ) என்ற நூல் வெளியிடப்படுவதற்கு முன்னரே சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.
'திவயின' என்ற சிங்கள நாளிதழின் ஊடகவியலாளரான சி.ஏ..சந்திரபிறேம எழுதியுள்ள 'கோத்தாவின் போர்‘ என்ற இந்த நூல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்னிலையில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நூல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், நாடாளுமன்றில் பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ளார்.
“யாருடைய போர் ? இது கோத்தாவின் போர் எனக் கூறுகின்றது. இந்த நூலின் உப தலைப்பு ஒன்று 'இலங்கையில் தமிழ்ப் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்தல்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் புலிகளுக்கு சமமாகவும், பயங்கரவாதிகளுக்கு சமமாகவும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான எண்ணங்கள் நாட்டில் நல்லிணக்கப்பாட்டை உருவாக்க ஒருபோதும் உதவாது.
நீங்கள் யுத்தத்தைப் பற்றிய எந்த நூலையும் எழுதலாம். அது பிரச்சினையில்லை. அது தொடர்பாக நான் இங்கு விவாதிக்கவில்லை. ஆனால் இந்த நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழி தொடர்பாகவே நான் பேசுகின்றேன்.
இவ்வாறான மனப்பாங்கு நாட்டில் அமைதியை ஒருபோதும் தோற்றுவிக்காது“ என சுமந்திரன் நாடாளுமன்றில் தனது வாதத்தை முன்வைத்துள்ளார்.
“அண்மையில் மாவட்ட அரசாங்க அதிபர்கள் இடமாற்றம் செய்யப்பட்டதானது நாட்டில் மீளிணக்கப்பாடு உருவாவதில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்ப் பிரதேசத்தில் இருந்த அரசாங்க அதிபர்கள் மாற்றப்பட்டு, அங்கு தமிழ் மொழித் தேர்ச்சி இல்லாத அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதானது, நாட்டில் மேற்கொள்ளப்படும் மீளிணக்கப்பாட்டு நகர்வில் முன்னேற்றத்தை ஏற்படுத்தாது.
கடந்த வியாழனன்று வவுனியா அரசாங்க அதிபர் இடம்மாற்றம் செய்யப்பட்டார். அதேபோன்று மன்னார் அரசாங்க அதிபரும் இடம்மாற்றம் செய்யப்பட்டார். இதனை நாம் வன்மையாக எதிர்க்கின்றோம்.
தமிழ் மொழித் தேர்ச்சி இல்லாத ஒருவர் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ளதை நாம் மீண்டும் மீண்டும் எதிர்த்து நிற்கின்றோம். அத்துடன் இவர் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியாவார்.
ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளை ஆளுநர்களாகக் கொண்ட இரு மாகாணங்கள் என்றால், அவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் மட்டுமே.
ஏன் இவ்வாறு நடக்கிறது? யுத்தம் முடிவடைந்து மூன்று ஆண்டுகள் முடிவடைந்தும் கூட, தற்போதும் நல்லிணக்கப்பாடு தொடர்பாக வெறும் வாயளவில் மட்டுமே பேசப்படுகின்றது. இது தொடர்பாக ஆக்கபூர்வ நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
நீங்கள் வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் மீது கட்டுப்பாடுகளைத் திணித்து, மக்களின் சொந்த நிலங்களை அபகரிக்க விரும்புகிறீர்கள்' என்றும் சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

No comments:

Post a Comment