news

Friday, May 25, 2012

கொத்தடிமையாக்கப்பட்டு மீட்கப்பட்ட சிறுவன் வீட்டுக்கு கூட்டிச்செல்லுமாறு தாயாரிடம் கதறல்


அம்மா! இனியும் என்னால் உங்களைப் பிரிந்திருக்க முடியாது. என்னை வீட்டுக்கு கூட்டிக்கொண்டு போங்கள். கொத்தடிமையாக்கப்பட்டு இப்போது மீட்கப்பட்ட பின்னரும் குடும்பத்தாருடன் செல்ல முடியாமல் வைத்தியசாலையிலேயே வைத்திருக்கிறார்கள்.
நான் மீண்டும் என் தாய் மற்றும் சகோதரருடன் இணைந்து வாழ வீட்டுக்குப் போக வழிவிடுங்கள்'' . இவ்வாறு கண்ணீர் மல்கி தாயைக் கட்டிப்பிடித்துக்கொண்டு வைத்தியசாலையில் கதறினான் பரமநாதன் ரஜிராம் (வயது 13).
கல்லையும் கரையச் செய்தது இந்த காட்சி. நீதிமன்றில் நகர்தல் பத்திரம் சமர்ப்பித்து சிறுவனை இன்று விடுவிக்கவுள்ளதாக நன்னடத்தை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சண்டிலிப்பாயைச் சேர்ந்த குறித்த சிறுவன் கடத்தப்பட்டு, முஸ்லிமாக மாற்றப்பட்டு, யாழ்.நகருக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டு புடைவை வியாபாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட போது கண்டுபிடிக்கப்பட்டான்.
ஏறக்குறைய ஒரு வருடத்துக்கு மேலாக கொத்தடிமையாக்கப்பட்ட சிறுவன் தற்போது மருத்துவப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டான்.
மருத்துவப் பரிசோதனையின் பின்னர் குறித்த சிறுவன் வீடு செல்ல அனுமதிக்கப்படுவான் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மருத்துவப் பரிசோதனைகள் யாவும் மேற்கொள்ளப்பட்ட பின்னர் சிறுவனை அழைத்துச் செல்ல அவனது சகோதரனும் உறவினர்களும் வைத்தியசாலைக்கு வந்துள்ளனர்.
எனினும் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் சிறுவனை விடுவிக்க முடியாது என்று வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனால் நேற்று வீடு செல்லும் கனவுடன் இருந்த சிறுவன் ஏமாற்றம் அடைந்து கதறியழத் தொடங்கினான். விடுதிக்குச் செல்ல மறுத்ததுடன், தனது சகோதரனுடன் வீட்டுக்கு செல்ல விடுமாறு மன்றாடினான். எனினும் சட்டப்படியே இந்த விடயத்தை அணுகவேண்டியிருப்பதால் சிறுவன் நேற்று வீடுசெல்ல அனுமதிக்கப்படவில்லை.
இது குறித்து சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த சிறுவன் தனது தாயாருடன் செல்ல விரும்பியதையடுத்து மல்லாகம் நீதிமன்றில் இன்று நகர்தல் பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை தாயாரிடம் அவன் ஒப்படைக்கப்படுவான் என்றனர்.
இதேவேளை, சிறுவனைக் கடத்திய குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்ட அப்துல்லாஹ் மொஹமட் ஜமீல் மற்றும் காத்தான்குடியைச் சேர்ந்தவர்களான மொஹமட் சுல்தான் மொஹமட் றியாஸ், மொஹமட் முஸ்தப்பா மொஹமட் நஜீம் ஆகியோரில் 3 ஆவது நபரான நஜீப் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மற்றைய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment