Antilia என்றழைக்கப்படும் புராணகாலத் தீவொன்றின் பெயரைக்கொண்ட இந்த வீடு மும்பாயிலுள்ள அல்ரமௌன்ற் வீதியில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி 1 பில்லியன் டொலர் இருக்குமெனக் கூறப்படுகின்றது.
அங்கு உலங்குவானூர்தித் தளங்கள், பாரியதொரு நூலகம், உணவு உட்கொள்ளும் பகுதிகள், பளபளக்கும் மாபிள் தரைகள் மற்றும் ஒரு பனி அறைகூட உள்ளதென அங்கு சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.
திரு.அம்பானியின் மனைவி நீட்டா குறிப்பிடுகையில் தமது வீடு பற்றிக் கதைப்பது இதுதான் முதல் தடவை என்றார். பெரும்பாலான ஊடகங்கள் அந்தக் குடும்பம் அங்குதான் வசிக்கின்றார்களா என்பதையே கவனித்தும் வந்துள்ளன. இவற்றில் சில அவர்கள் அந்த வீட்டிற்கு மாறாததற்குக் காரணம் அவ்வீடு இந்திய முறைப்படி வாஸ்து சாஸ்திரப்படி கட்டப்பட்டிருக்கவில்லை என்றெல்லாம் குறிப்பிட்டன.
தாங்கள் 2 மாதங்களிற்கு முன்னதாகவே அங்கு வந்துவிட்டாலும் செய்திகள் தவறாகவே உலவிவந்தன என்றார் அவர்.
இவ்வீடுபற்றித் திருமதி அம்பானி குறிப்பிடுகையில் இதுவொரு இந்திய இதயத்துடன்கூடிய நவீன வீடு என்றார். இவ்வீட்டின் அறைகளில் ஒன்றின் உட்கூரையிலிருந்து தரைவரையான நிழற்படம் வெளியிடப்பட்டிருந்தது. இதைப் பார்க்கையில் அதுவொரு 5-நட்சத்திர விடுதியின் அறையோ என்றுதான் நினைக்கத் தோன்றுகின்றது.
அன்ரிலியா 27மாடி கொண்டதாயினும் அதன் ஒவ்வொரு மாடியும் வழமையானதைவிடவும் 2 அல்லது 3 மடங்கு அதிக உயரங்கொண்டதாக இருந்ததால் 570 அடி உயரமாகவும் கிட்டத்தட்ட 40மாடி கொண்ட கட்டடத்தின் உயரைத்தைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது என்றார் அதைப் பார்த்த ஒருவர்.
இதில் ஒரு வாகனத் தரிப்பிடமும் ஒரு நடன அறை, ஒரு திரையரங்கு, ஒரு நீராவிக் குளியலறை, விருந்தினர் பகுதிகள் மற்றும் பல தோட்டங்களும் காணப்படுகின்றன.
இதன் வடிவமைப்பு தாமரை மற்றும் சூரியன் போன்று காணப்படுகின்றது. இது அரிதான மரங்கள், மாபிள், முத்துக்கள் மற்றும் படிகங்களால் இந்தியாவின் சிறந்த சிற்பிகளால் செதுக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வழமையான இந்துக்களின் வீடுகளில் காணப்படுவதுபோல ஒரு பு+ஜை அறையும் உள்ளது.
1 பில்லியன் என்பது முகேஷ் அம்பானியைப் பொறுத்தவரை சிறிதளவேயெனினும் மும்பாய் போன்ற நகரில் லட்சக்கணக்கானோர் வீடுவாசலின்றி வீதிகளில் இருக்கையில் இவ்வாறானதொரு ஆடம்பரமான வீடு தேவைதானா என்ற விமர்சனமும் எழுந்துகொண்டுதானிருக்கின்றது.


No comments:
Post a Comment