news

Saturday, April 28, 2012

கொத்தணி குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அடிப்படையற்றவை

வன்னியில் மனிதாபிமான நடவடிக்கையின் போது எவ்விதமான தடைச் செய்யப்பட்ட ஆயுதங்களையும் இலங்கை இராணுவம் பயன்படுத்தவில்லை. கொத்தணிக்குண்டுகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அடிப்படை தன்மையற்றவை என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
புதுக்குடியிருப்பில் கொத்தணிக்குண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டதாக வெளியாகின்ற செய்திகள் உண்மைக்கு புறம்பானவை. அதே போன்று பளையில் சிறுவர்கள் இருவர் கைக்குண்டு வெடித்து மரணித்தமைக்கும் புதுக்குடியிருப்பு செய்திக்கும் தொடர்பில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிக சூரிய தொடர்ந்தும் கூறுகையில்,
இலங்கையில் வடக்கு பிரதேசம் ஒன்றில் கொத்தணிக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச இணையத்தள செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது. இச் செய்தியானது இலங்கைக்கும் இராணுவத்திற்கும் அபகீர்த்தியாகவே அமைந்துள்ளது.
அத்தோடு மேற்படி குற்றச்சாட்டினை இலங்கை இராணுவம் அடியோடு மறுக்கின்றது. ஏனென்றால் வடக்கில் நிலை கொண்டிருந்த புலி பயங்கரவாதிகளை அழித்து அங்கிருந்து பொது மக்களை பாதுகாப்பாக மீட்டெடுப்பதற்காக இராணுவம் கடந்த காலங்களில் தியாகபூர்வமாக செயற்பட்டது.
சர்வதேச போர் ஒழுக்க நெறிகளை கையாண்டு பொது மக்களின் உயிர் சேதங்களை முழு அளவில் கட்டுப்படுத்தி மிகவும் வெளிப்படை தன்மையுடனேயே உள்நாட்டுப் போரை முடிவிற்கு கொண்டு வந்தோம். ஆனால் தற்போது போர்க் குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமைகள் பிரச்சினை என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை சர்வதேச நாடுகள் இராணுவத்திற்கு எதிராக சுமத்துகின்றன.
தற்போது கொத்தணிக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின்றமை பொய்யான தகவலாகும். நல்லிணக்க ஆணைக்குழுவை பரிந்துரைகளில் இராணுவத்துடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து விசாரித்து வருகிறோம் எனக்கூறினார்.

No comments:

Post a Comment