news

Friday, April 27, 2012

காகிதக் கப்பல் விடுவதற்காய் எமை அழைக்கும் கலைஞர் கருணாநிதி!

நன்றாகப் பேசவும் எழுதவும் தெரிந்த ஒரு அறிஞர் என்று உலகத் தமிழினமே நம்பியிருந்த கலைஞர் கருணாநிதி, உலகத் தமிழர்களுக்கே வஞ்சனை செய்த வடுக்களோடு கடந்த தமிழ்நாட்டுத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டார்.
அப்போது தான் தெரிந்தது அவர் பொருளோடு பேசும் ஆற்றல் கொண்டவர் மட்டுமல்ல, நன்கு பொருள் சேர்க்கத் தெரிந்த ஒரு “வியாபாரி” என்பது.
தமிழ் நாட்டு அரசியல் பதவி மூலம் தமிழுக்கும் தமிழர்களுக்கு சேவை செய்வதை மறந்து தனக்கும் தனது குடும்பத்திற்கும் சொத்துச் சேர்ப்பதில் செல்வாக்கை பலப்படுத்துவதிலும், துரிதமான செயற்பட்ட ஒரு “செயல் வீரன்” கருணாநிதி என்பதை அனைவருமே நன்கு உணர்ந்து கொண்டார்கள்.
இந்திய மத்திய அரசில் நன்கு செல்வாக்குச் செலுத்தக் கூடிய அரசியல் மற்றும் பொருளாதார பலம் இருந்தும் அருகே உள்ள நாட்டில் அவதிப்பட்ட போராளிகளையும் பொதுமக்களையும் காப்பாற்றுவதற்கு இதயமே இல்லாத ஒரு மனிதனாகவே அன்று அவர் அனைவருக்கும் தெரிந்தார்.
வன்னி மண்ணிலும் இன்னும் பல இடங்களிலும் விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளும் அவர்களுக்கு பக்க பலமாக நின்றிருந்த பொதுமக்களும் குறி வைத்து நடத்தப்பட்ட போரின் போது இன்று என்ன நடக்கும், நாளை என்ன நடக்கும் என்பதையெல்லாம் நன்கு அறிந்து கொண்டு ஒன்றும் அறியாதவராக பாசாங்கு செய்து, இறுதியில் முள்ளிவாய்க்காலோடு முடக்கப்பட்ட நமது விடுதலைப் போராட்டத்தின் “சாவை”க் கண்டு மனதிற்குள் சிரித்துக் கொண்டவர்தான் இந்த முத்துவேல் கருணாநிதி.
வெற்றியின் விளிம்பில் நின்ற விடுதலைப் புலிகளின் கனவை நனவாக்கக் கூடிய வல்லமை இருந்தும் அந்த போராட்டம் அடங்கினால் தமிழ் நாட்டில் தனக்கெதிராகப் பேசும் அரசியல் செயற்பாட்டாளர்களை அடக்கி விடலாம் என்று கனவு கண்டவரும் இந்த கருணாநிதி தான்.
தமிழீழம் என்று பெயரிட்டு நாம் வளர்த்து வந்த அந்த பச்சைக் கிளியை கொன்று எரிவதற்கு துணை நின்றவர்தான் இவர். எத்தனையோ ஆயிரம் போராளிகளின் இரத்தம் சிந்திய உடல்களை தமது கைகளால் அடக்கம் செய்து விட்டு அடுத்து நிமிடம் மண் மீட்புப் போரை நடத்துவதற்கு அணிவகுத்து நின்ற போராளிகளை கொத்துக் கொத்தாய் கொன்றழிப்பதற்கு “பச்சைக் கொடி” காட்டிய “இச்சை அரசன்” தான் இவர்.
இவருக்கு என்ன நடந்ததோ தெரியாது, சிறிது காலம் பேசாமல் இருந்த இந்த “பெரியவர்” இப்போது பேசுவதற்கு தனது வாயைத் திறந்துள்ளார். முன்னர் அவர் பதவியிலிருந்த போது ஈழ மண்ணில் அந்த கொடுமைகள் அரங்கேறின. உலகமே திரண்டு வந்து அங்கு அணிவகுத்து நின்றது.
வான் பரப்பில் இரைச்சல்களோடு பறந்து செல்லும் விமானங்களும் கடலைக் கிழித்தபடி நமது மண்ணைச் சூறையாடச் சென்ற கொடிய போர்க் கப்பல்கள் எல்லாம் அவரது தமிழ் நாட்டு வான்பரப்பினூடாகவும், தமிழ்நாடு சார்ந்த கடற் பிரதேசத்தின் ஊடாகவே “பறந்திருக்க” வேண்டும். அப்போதெல்லாம் அவர் கடைப்பிடித்த கடும் விரதம் மௌனம் தான்.
இந்தக் கருணாநிதியின் இப்போது தமிழீழம் பற்றிப் பேசுகின்றார். தமிழீழம் அமைவதற்கான அனைத்து சாதகமான சூழ்நிலையிருந்தும், அது நிகழக்கூடாது என்று விரும்பிய அல்லது எண்ணிய ஏனைய அரசியல் சக்திகளோடு கைகோர்த்து நின்று அவர் அதனைச் சாதித்தார். எத்தனையோ போராளிகளையும் பொது மக்களையும் சமாதியாக்கினார்.
இராணுவ பலம் கொண்ட நாடுகள் கூட எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு இராணுவ தளபாடங்கள் மற்றும் சுயமான செயற்பாடுகள் அதனோடு பலமான எதிரிகளோடு மோதக் கூடிய வகையிலான புதிய கண்டு பிடிப்புக்கள், மரணத்தைக் கண்டு அஞ்சாத அர்ப்பணிப்புள்ள நெஞ்சங்கள், புலம் பெயர்ந்த நாடுகளிலிருந்து கிடைத்த தாராளமான பொருளுதவிகள், தொழில் நுட்ப பலம்.. இவை அனைத்தும் கொண்ட நமது விடுதலைப் புலிகள் இயக்கமும் அதன் ஒப்பற்ற தலைவர்களும் கொடூரமான முறையில் கொன்றழிக்கப்படும் காட்சியை தனது மனக்கண்களால் கண்டு மகிழ்ந்திருப்பார் இந்த முத்துவேல் கருணாநிதி.
கண்ணுக்கு எட்டிய தூரத்திலிருந்த தமிழீழம்; என்ற தாயை கதறக் கதற அடித்துத் துரத்துவதற்கு துணை நின்றவர் கருணாநிதி. விடுதலை வேட்கை என்ற அந்த ஒப்பில்லாத தியாக உணர்வு இனிமேலும் ஒருபோதும் அந்த மண்ணில் துளிர் விடக் கூடாது என்று எந்தளவிற்கு இலங்கை ஜனாதிபதி மகிந்தா உறுதியாக இருந்தாரோ அதனை விஞ்சுகின்ற அளவிற்கு கலைஞர் கருணாநிதிக்கும் கருத்துக்கள் இருந்திருக்கின்றன. அதை அவரது அன்றைய நடவடிக்கைகள் அனைத்துமே நமக்கு காட்டி நின்றன.
உலகமே வியந்த விடுதலை இயக்கத்தை உலகமே திரண்டு வந்து அழி;க்கின்றது என்று தமிழ் நாட்டில் மூலை முடுக்கெல்லாம் தமிழ் உறவுகள் தீக்குளித்தும் தற்கொலை செய்து கொண்டும் உண்ணா நோன்பிருந்தும் தங்கள் அனுதாபத்தையும் ஆதரவவை காட்டி நின்ற வண்ணம், இந்தியாவின் மத்திய அரசிற்கு உங்கள் எதிரப்பைத் தெரிவிக்கும் வண்ணம் மத்திய அரசில் திமுக வகித்த அமைச்சர் பதவிகளை இராஜினாமா செய்யுங்கள் என்று தமிழக மக்கள் கெஞ்சிக் கேட்டும் சற்றும் மனம் மாறாத ஒரு மாற்றானை ஒத்து நடந்து கொண்ட இந்தக் கலைஞர் இப்போது தமிழ் ஈழம் பற்றி பேசத் தொடங்கியுள்ளார்.
மத்திய அரசின் கபடமோ அன்றி மு. கருணாநிதியிடம் இயல்பாகவே உள்ள வஞ்சக சிந்தனையோ தெரியாது, இவர் தற்போது ஈழத்தமி;ழர்களின் தமிழ் ஈழம் பற்றி பேசுகின்றார். கைகளில் தான் செய்த காகிதக் கப்பலைக்; காட்டிய வண்ணம், நமது மக்களுக்கு போலியான நம்பிக்கைகளை ஊட்ட முனைகின்றார். தான் இறப்பதற்கு முன்னர் தமிழீழம் மலருமாம். அவ்வாறு தோன்றும் தமிழீழத்தைக் கண்களால் தரிசித்த பின்னர்தான் தான் இந்த உலகத்தை விட்டுப் போவாராம்.
கருணாநிதியின் இந்த காகிதக் கப்பல் கதைகளைக் கேட்டு வை.கோ போன்றவர்கள் அவருக்கு எதிரான கருத்துக்களை கூறி வருகின்றனர். தமிழீழக் கனவை சிதறடித்த கருணாநிதிக்கு தமிழீழம் பற்றி பேசுவதற்கு எவ்வித உரிமையும் இல்லை என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார் வை. கோ அவர்கள். அந்த தமிழ் நாட்டுத் தலைவர்கள் ஒரு புறம் புலம் பெயர் தமிழர்கள் ஒரு புறம் தாயகத் தமிழர்கள் ஒரு புறம் என்று நின்றபடி கபடம் நிறைந்த கருணாநிதியின் போலியான கருணை நமக்குத் தேவையில்லை என்பதை அவருக்கு கேட்கும்படியாக நாம் உரத்துக் கூறவேண்டும்.
கனடா உதயன் - கதிரோட்டம்

2 comments:

  1. தமிழீழம் என்பது கனவல்ல அது ஒவ்வோரு மானத்தன்மானத் தமிழனினதும் இலட்சியம். ஆனால் அதை இந்த மனிதர் பெற்றுக் கொடுக்கப் பொவது போல் பாசாங்கு காட்டுவதைத் தான் பொறுக்க முடியாதுள்ளது. எத்தனையோ சந்தர்ப்பங்கள் கதவைத் தட்டியபோதும் தூங்குவது போல் நடித்தவர் இப்போது அலட்டுவது எதற்காக? இதுவே இன்றைய தமிழர் மனதில் எழுந்துள்ள மிலியன் ரூபாய்க்கான கேள்வி. இவருக்கு அரசியல் பண்ண பாவப்பட்ட ஈழத்தமிழர்களின் துன்பம் தான் என்றும் உதவியது. இனியும் உதவும் என்ற நப்பாசையா? தயவு செய்து ஒதுங்கியிருங்கள். உங்கள் அசிங்க அரசியல் அபிலாஷைகளுக்காக எம் துன்பங்களை வியாபாரப் பொருளாக்காதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. sathya nengka sollurathu unmai than vanniyil nangka sakum pothu paththuddu irunthavan eppady tamileelam tharuvan?

      Delete