news

Sunday, June 10, 2012

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நியமித்த நிபுணரை திருப்பியனுப்பிய பணிப்பாளர்: அதிர்ச்சியில் வைத்தியர்கள்


யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட சத்திர சிகிச்சை நிபுணர் ஒருவரை (OMF) யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் திருமதி. பவாணி பசுபதிராசா திருப்பியனுப்பிய சம்பவம் யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட வைத்திய நிபுணர் தற்காலிகமாக வவுனியா வைத்தியசாலையில் பணியாற்ற சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
யாழ்.போதனா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பற்றாக்குறை உள்ள நிலையில் சுகாதார அமைச்சு நியமித்த நிபுணரை வைத்தியசாலையின், பணிப்பாளர் திருப்பியனுப்பிய சம்பவம் தமக்கு கடும் அதிர்ச்சியளிப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு குறித்த வைத்திய நிபுணரை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நியமிக்க வேண்டும் என கோரி வைத்தியர்கள், யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருக்கும் சுகாதார அமைச்சிற்கு கையெப்பமிட்டு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளனர்.
ஜெய்க்கா நிறுவனத்தின் நிதி உதவியுடன் யாழ்.போதனா வைத்தியசாலையில் 12 சத்திர சிகிச்சை கூடங்கள் அடங்கிய சத்திரசிகிச்சை கூடம் ஒன்றை தற்போது அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இக்கூடமானது இவ்வருடம் இறுதிப் பகுதியில் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இவ்வாறு நவீன வசதிகளுடன் கூடிய புதிய சத்திரசிகிச்சை கூடங்கள் கொண்டு தொகுதி அமைக்கப்பட்டால் இப்போது இருப்பதைப் பார்க்கிலும் அதிகமாக நிபுணத்துவம் வாய்ந்த வைத்தியர்கள் தேவையாகவிருக்கும்.
இந்நிலையில் சுகாதார அமைச்சு இந்நிபுணரை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நியமித்திருந்தது. இவ்வாறு சுகாதார அமைச்சு நியமித்த நிபுணரையோ தற்போது போதிய சத்திரசிகிச்சை கூட வசதிகள் யாழ்.போதான வைத்தியசாலையில் இல்லையென்ற காரணத்தை காட்டி பணிப்பாளர் நிராகரித்துள்ளார்.
இந்நிபுணர் தற்போது நியமிக்கப்பட்டால் இவ்வருட இறுதியில் திறக்கப்படவுள்ள சத்திர சிகிச்சை கூடங்கள் தொடர்பான பூர்வாகங்க நடவடிக்கைககளை இவர் மேற்கொள்ள முடியும் என்றும் இதன் மூலம் வடக்கில் வாழும் தமிழர்கள் அதிக நன்மையை பெற முடியும் எனவும் வைத்தியர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை 1983ம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இவ்வாறான வைத்திய நிபுணர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நியமிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கின்ற வைத்தியர்கள் இவ்வாறான நடவடிக்கைகள் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாமையே எடுத்துக்காட்டுவதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை ஏற்கனவே வைத்தியசாலையிலிருந்து இரும்புக் கேடர்கள் மற்றும் மின்பிறப்பாக்கி என்பன சட்டவிரோதமான முறையில் வைத்தியசாலையிலிருந்து வெளியே கொண்டு சென்றது தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment